அனைத்தும் அழகிய தமிழில்...

எல்லா தகவல்களும் தமிழில்.... தமிழ் சமுதாயத்திற்காக....

Sunday, July 09, 2006

உலக கோப்பை : சிறந்த இளம் வீரராக பொடோல்ஸ்கி தேர்வு

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த 21 வயதான லுகாஸ் பொடோல்ஸ்கி தேர்வு பெற்றுள்ளார்.
ஒவ்வொரு உலக கோப்பை கால்பந்து போட்டியிலும் சிறந்த இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
இந்த உலக கோப்பை போட்டியில் சிறந்த இளம் வீரராக ஜெர்மனி அணியை சேர்ந்த 21 வயதான லுகாஸ் பொடோல்ஸ்கியை பிபா டெக்னிக்கல் கமிட்டி தேர்வு செய்து உள்ளது.
இந்த விருதுக்காக நடத்தப்பட்ட இன்டர்நெட் ஓட்டெடுப்பில் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அதிக ஆதரவு கிடைத்து இருந்தது. அர்ஜென்டினா வீரர் மெஸ்சி 2-வது இடத்திலும், ஈகுவடார் வீரர் லுயிஸ் வாலென்சியாவுக்கு 3-வது இடமும் கிடைத்து இருந்தது. ஓட்டெடுப்பில் பொடோல்ஸ்கிக்கு 4-வது இடமே கிடைத்து இருந்தது.
ஆனால் பிபா டெக்னிக்கல் கமிட்டி முடிவின் படி லுகாஸ் பொடோல்ஸ்கி சிறந்த இளம் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1985-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு பிறந்தவர்கள் தான் இந்த விருதுக்கு தகுதி படைத்தவர்கள். சிறப்பான ஆட்டம், விதிமுறைக்கு மாறாக ஆடாமல் இருத்தல் ஆகியவை கருத்தில் எடுத்து கொள்ளப்படும்.
21 வயதான் லுயிஸ் பொடோல்ஸ்கி 6 ஆட்டத்தில் விளையாடி 3 கோல்கள் அடித்துள்ளார்.

இந்தியாவில் 2013 சாலஞ்சர் கோப்பை அல்லது டுவென்டி20 கோப்பை

வரும் 2013ம் ஆண்டில் இந்தியாவில் சாம்பியன் கோப்பை அல்லது டுவென்டி 20 கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று ஐசிசி ஆண்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
லண்டனில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2015ம் ஆண்டு வரையிலான போட்டிகள் நடைபெறும் இடங்கள் தொடர்பான கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஐசிசி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு சாம்பியன் கோப்பை போட்டிகளை இந்தியா நடத்தவிருக்கும் நிலையில், 2015ம் ஆண்டு வரையிலான போட்டிகள் அட்டவணை வெளியிடப்பட்டது.
தவிர 2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்துடன் இணைந்து இந்திய நடத்தும்.
ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.

டெஸ்ட் போட்டிகளை முன்கூட்டியே முடிக்க ஐசிசி ஒப்புதல்

குறிப்பிட்ட ஒரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 75 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில், முடிவு இருக்காது என்பது தெரியவரும்பட்சத்தில், அந்த டெஸ்ட் போட்டியை முன்கூட்டியே முடித்துக் கொள்வதற்கு ஐசிசி ஒப்புதல் அளித்திருக்கிறது.
லண்டனில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு கூட்டத்தில் அதன் புதிய தலைவராக பெர்சி சோன் நியமிக்கப்பட்டிருப்பதற்கு முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
டெஸ்ட் போட்டியின் கடைசி நேரத்தில், அந்தப் போட்டியில் முடிவு ஏற்படாது என்பது உறுதியானால், அப்போட்டியை 75 ஓவர்களுக்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் கைவிடலாம் என ஐசிசியின் தலைமை நிர்வாகிகள் குழு (சிஇசி) அளித்த பரிந்துரை ஏற்கப்பட்டிருப்பதாக ஐசிசி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த புதிய விதி உடனடியாக அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே ஐசிசியின் தலைவர் பதவியிலிருந்து ஈஷான் மணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைவராக பெர்சி சோன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறைந்தது 2 ஆண்டுகள் வரையிலும், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரையிலும் பெர்சி இப்பதவியில் நீடிப்பார்.

அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி-3 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர்ஸ் தீவில் உள்ள ஏவுகணை தளத்தில் இருந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மற்றும் 300 விஞ்ஞானிகள் முன்னிலையில் அக்னி-3 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.3500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள குறியைத் தாக்கும் திறண் கொண்ட இந்த அக்னி ஏவுகணை சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களை சென்று தாக்கும் வல்லமை படைத்ததாகும்.சீனா ஏவுகணை போட்டியில் இந்தியாவை விட முன்னணியில் உள்ளது என்ற போதிலும் இன்னும் சில ஆண்டுகளில் சீனாவுக்கு நிகராக இந்தியா உருவெடுக்க இந்த அக்னி 3 ஏவுகணை உதவும்.அக்னி - 3 ஏவுகணை சோதனை கடந்த ஓராண்டில் 2 முறை ஒத்திவைக்கப்ட்டது. அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக ஒத்திவைக்கப்பட்ட இந்த சோதனை தற்போது அந்த ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய விமான விபத்து - 150 பேர் பலி

ரஷ்ய விமானம் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 150 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சைபீரியாவில் உள்ள இர்குஸ்க் என்ற இடத்திற்கு 192 பயணிகள் மற்றும் 8 பேர் கொண்ட குழுவுடன் விமானம் ஒன்று சென்றது.இர்குஸ்க் விமான நிலையத்தில் இன்று காலை 7.30 மணி அளவில் அந்த விமானம் தரையிறங்கும் போது விமான ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகில் இருந்த கான்கிரீட் தடுப்புச் சுவர் மீது மோதியது. இதன் காரணமாக விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 150 உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 43 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும், 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர தப்பியதாகவும் செய்தித் தொடர்பாளர் இரினா ஆண்ட்ரினோவா தெரிவித்தார்.

Friday, July 07, 2006

மலிவு விலை சமையல் எரிவாயு கண்டுபிடிப்பு

உ.பி., மாநிலம் லக்னோவைச் சேர்ந்த மாணவர்கள் பிரஜ்பன் சிங் யாதவ், நீரஜ் குமார், சந்தீப் குமார் ராஜ்புத். இன்டர்மீடியட் வகுப்பு படிக்கும் இந்த மாணவர்கள் சமையல் எரிவாயுவுக்கு பதிலாக மாற்று எரிவாயுவை கண்டு பிடித்துள்ளனர்.ஜனாதிபதி அப்துல் கலாமை "ரோல் மாடலா'கக் கொண்டு செயல்பட்டதாக கூறும் இந்த மாணவர்கள், தங்களது புதிய கண்டு பிடிப்புக்கு காப்புரிமை (பேடன்ட் ரைட்) கோரி டில்லியில் உள்ள "பேடன்ட் அண்ட் டிசைன் கன்ட்ரோலருக்கு' கடந்த மாதம் 19ம் தேதியே விண்ணப்பித்து விட்டனர்.இந்த புதிய வகை மாற்று சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்ய சிலிண்டருக்கு ரூ. 40 மட்டுமே செலவாகிறது.இதற்கிடையில், மாணவர்களின் மலிவு விலை சமையல் எரிவாயு தொடர்பாக, "மரபு சாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம்' விவாதித்து வருகிறது.நாளுக்கு நாள் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த கண்டு பிடிப்பு உபயோகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

3ம் நடுவரிடம் வீரர்கள் கோரிக்கை யோசனை: ஐசிசி நிராகரித்தது

எதிர்வரும் ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டிகளில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் கள நடுவர்களின் தீர்ப்பிற்கு எதிராக ஒரு இன்னிங்சில் 3 முறை தொலைக்காட்சி நடுவரிடம் மேல்முறையீடு செய்வதை பரீட்சார்த்த அடிப்படையில் செயல்படுத்தலாம் என்ற பரிந்துரையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்து விட்டது.
ஐ.சி.சி கமிட்டி இதுதொடர்பாக செய்திருந்த பரிந்துரை தீவிர ஆலோசனைக்குப் பிறகே நிராகரிக்கப்பட்டதாக ஐசிசி தலைவர் ஈஷான் மணி தெரிவித்தார்.
சாம்பியன் கோப்பை மிகவும் மரியாதைக்குரிய ஆட்டங்களில், இதுபோன்ற திட்டங்களை சோதனை அடிப்படையில் செயல்படுத்திப் பார்ப்பது அவ்வளவு சரியானதல்ல என்று கூறிய அவர், கள நடுவர்களிடையே அதிருப்தியை வெளிப்படுத்தக்கூடும் அந்த கமிட்டி அளித்த பரிந்துரையை கைவிட்டதாக மணி மேலும் கூறினார்.

இந்திய கிராமங்களில் இணைய வளர்ச்சி!

பல சேவை சார்ந்த நிறுவனங்கள் இந்திய கிராம மற்றும் புறநகர் பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப சேவைகளை மற்றும் நவீன மக்கள் தொடர்பு சாதனங்களை அறிமுகப்படுத்தி புரட்சியையும் மலர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.
ஹைதராபாத்தில் உள்ள மேனேஜ் எனப்படும் தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை பயிலகம் நாட்டில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கிராமங்கள், பஞ்சாயத்துக்கள் என மாவட்ட வாரியாக இந்த நிறுவனம் தகவல் மையங்களை அமைத்து மாவட்ட மக்களுக்கு தேவையான இணைய தளங்களை ஏற்படுத்தி அவற்றை பயன்படுத்த பயிற்சியும் அளித்து வருகிறது.
இணையத்தை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்பங்கள் மூலமாக பல்வேறு தட்ப வெப்பநிலைகளில், பல கடினமான பகுதிகளில் வாழும் விவசாய மக்களுக்கு தேவையான தகவல்களை அளிக்க முடியும் என்பதால் அரசும் பல சேவை நிறுவனங்களும் இணைந்து கிராம மக்களுக்கு தொழில்நுட்ப அறிவை ஊட்ட செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் கிராம மக்களிடையே தகவல் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகள் விரைவாக பெருகி வருகிறது. இது போன்ற விரைவான நடவடிக்கைகளால் இணையம் இந்தியாவின் பெரும்பான்மையான மாவட்டங்களை சென்றடைந்துள்ளது. இந்த சேவைகள் தற்போது கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துக்கள் அளவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. கிராம மக்களும் மிகுந்த ஆர்வமுடன் ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக இப்பணிகளில் ஈடுபட்டு உள்ள சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேனேஜ் அமைப்பு 7 மாநிலங்களில் உள்ள 24 மாவட்டங்களில் தேசிய விவசாய தொழில்நுட்ப திட்டம் என்கிற பெயரில் இணைய இணைப்புகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கணிப்பொறிகள் இயக்குவதற்கான பயிற்சிகள் மற்றும் இணையம் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளையும் இந்த அமைப்பு கிராம மக்களுக்கு வழங்கி வருகிறது. கிராம மக்கள் பயன்படுத்த கூடிய அளவில் மிக எளிமையான பயன்பாட்டு மென்பொருள்களையும் நிறுவி பயிற்சி அளித்து வருகிறது.
கிராம மக்கள் இந்த நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக தாங்கள் மிகுந்த பயன் அடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர். வானிலை அறிக்கைகள், அருகில் உள்ள நகர சந்தை விலைகள், வேலைவாய்ப்பு விபரங்கள், செய்திகள் என பல முக்கிய விபரங்களை பெற முடிவதாகவும், சந்தை நிலவரங்கள் தெரிவதால் வியாபாரிகள் மூலம் ஏமாற்றப்படுவது தடுக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேனேஜ் அமைப்பு 28 மாவட்டங்களில் இணைய வசதியை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இந்த அமைப்பு கிராம மக்களுக்கு உதவும் வகையில் இரண்டு கால்சென்டர்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் மதுரை அருகில் மேலூரை சுற்றி உள்ள கிராமங்களுக்கு DHAN அமைப்பு சார்பில் இணைய மையங்கள் ஏற்படுத்தபட்டு கிராம மக்களுக்கு தேவையான விபரங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. கிராம மக்கள் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற பலவற்றை இணையம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கிராமங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இணைய மையங்களில் வந்து மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியாளருக்கு புகார் கடிதங்களை மின்னஞ்சல் வழியே அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
தகவல் தொழில்நுட்பங்கள் கிராம மக்களின் தொலைதொடர்புக்கு மட்டுமின்றி தொழில் வாய்ப்பையும் அமைத்து கொடுக்கும் வகையில் அமையும் என்றால் விவசாய மக்களுக்கு வளமான எதிர்காலம் அமையும் என்பதில் என்ன சந்தேகம்?

அனிமேஷன் துறையில் வல்லுனர்கள் தேவை அதிகரிக்குமா?

அடுத்த தலைமுறை பொழுதுபோக்கு சாதனங்களில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் தொழில் வாய்ப்பாக அனிமேஷன் உருவாகி வருகிறது. உலகளவில் வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக கருதப்படும் இத்துறையில் வல்லுனர்களின் தேவையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.
இந்திய பொழுதுபோக்கு சந்தையை அனிமேசஷன் கொஞ்சமாகவே ஆக்கிரமித்து உள்ளது என்றாலும் வெளிநாடுகளில் இவற்றின் தேவை அதிகமாக உள்ளது. வெளிநாடுகளில் திரைபடங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி நாடகங்களிலும் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இடம் பிடித்திருப்பதை காணலாம். இந்திய சந்தையில் விளம்பரப்படங்களில் சமீபகாலமாக கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் அதிகம் வளர்ச்சி பெற்று வருகிறது.
இதனால் இவற்றை நன்கு செயல்படுத்த தெரிந்த வல்லுனர்கள் தேவையும் அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்த துறையில் இருக்கும் தொழில் வாய்ப்புகளையும் இந்திய நிறுவனங்கள் பயன்படுத்த துவங்கியுள்ளன.தொலைக்காட்சிகளுக்கான மென்பொருள் உற்பத்தி நிறுவனமான யூடிவி இரண்டு சர்வதேச தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து 14 மில்லியன் டாலர் மதிப்பிலான செயல்திட்டங்களை பெற்றிருக்கிறது. போர்ச்லைட் புரோடக்சன்ஸ் மற்றும் மைக் யங் புரோடக்சன்ஸ் நிறுவனங்களிடமிருந்து இந்த ஒப்பந்தங்களை யூடிவி பெற்றுள்ளது.
இந்த துறையில் சிறப்பு பெற்ற வல்லுனர்களின் தேவை விரைவில் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து பயிற்சி நிறுவனங்களும் தரமான பயிற்சி வகுப்புகளை ஆரம்பிக்க துவங்கி உள்ளன. பெங்களூரை சேர்ந்த டூன்ஸ்கூல் கர்நாடக திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பி.எஸ்ஸி (அனிமேஷன்) பட்ட வகுப்பை ஆரம்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
டூன்ஸ்கூல் மேலாண்மை இயக்குனர் அஸ்வின் அஜீலா கூறும்போது, `உலகளவில் 70 பில்லியன் டாலர் மதிப்பிலான அனிமேஷன் சந்தை பல துறைகளிலும் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. சிறந்த தேர்ச்சி பெற்ற வல்லுனர்களை இந்த துறையில் பல நிறுவனங்கள் எதிர்ப்பார்த்து இருக்கின்றன. இந்தியாவிற்கு நுண்மையான பணிகள் வெளிநாட்டிலிருந்து கிடைக்க வேண்டுமென்றால் உலக சந்தையில் போட்டி போடக் கூடிய வல்லுனர்கள் இந்தியாவில் உருவாக வேண்டும்.' என்று தெரிவித்தார்.பீபிஓ பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களும் இந்த துறையில் இருக்கும் தொழில் வாய்ப்பை உணர்ந்து உள்ளதால் இத்துறையில் இறங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன என்று தெரியவந்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள இந்த துறை வல்லுனர்களுக்கு மிகுந்த தட்டுபாடு ஏற்படும் என கருதப்படுகிறது.

பிஎஸ்என்எல் LBS சேவைக்கு உதவும் டெலினிடி

தொலைதொடர்பு துறை நெட்வோர்க்கில் அதிநவீன சேவைகள் அளித்து வரும் அமெரிக்க நிறுவனமான டெலினிடி, பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள Location Based Service சேவையை அளிக்க உள்ளதாக அறிவித்து உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது மொபைல் வாடிக்கையாளர்களுக்கு பல மதிப்பு கூடுதல் சேவைகளை (Value Added Services) அளிக்க தேவையான சர்வர்கள் மற்றும் மற்ற தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படும் என இந்நிறுவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவன மொபைல் சேவைகள் பிரிவின் பொது மேலாளர் எஸ். கிருஷ்ணன் இது தொடர்பாக கூறும்போது, ` டெலினிடி மூலமாக அளிக்கப்பட உள்ள லோகேஷன் பேஸ்டு சேவை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொபைல் மதிப்பு கூடுதல் சேவைகளை மிக வித்தியாசப்படுத்தி காட்டும். நிறுவன வருவாயையும் அதிகரிக்க இந்த புதிய சேவை உதவும்.' என்று தெரிவித்தார்.
இந்தியாவில் செயல்பாடுகளை தொடங்கிய ஒரு வருடங்களிலேயே இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய விரிவாக்க பணிகளில் ஈடுபட்டு வருவதாக டெலினிடி நிறுவன பொது மேலாளர் அஸ்வனி வாச்ஹர் தெரிவித்து உள்ளார்.

சீரியலுக்கு வருகிறார் மீனா!

ஜெயா டிவியில் ஒரு ஹோம் ஷோ மூலம் சின்னத்திரைக்கு வந்திருந்தாலும் முதன்முறையாக சின்னத்திரை தொடர் ஒன்றில் நடிக்கப்போகிறார் மீனா.
குஷ்புவை சின்னத்திரையில் `குங்குமம்' சீரியல் மூலம் அறிமுகப்படுத்திய சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் மீனா நடிக்கும் அந்தத் தொடருக்கு `லட்சுமி' என பெயர்வைக்கப்பட்டுள்ளது. மீனாவின் சின்னத்திரை வருகை இப்போதே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியருப்பதால் டென்ஷனாகியிருக்கிறார் ராதிகா.
ராதிகாவின் `செல்வி' சீரியலை இயக்கி வந்த சுந்தர்.கே.விஜயனுக்கு லட்சுமி சீரியல் இயக்கும் வாய்ப்பும் வந்திருக்கிறது.
`என்னைவிட மீனா முக்கியமா? அதனால் லட்சுமி சீரியலை இயக்க வேண்டாம்' இப்படி ஒரே நேரத்தில் இரண்டு சீரியலை இயக்கினால் செல்வி சீரியலின் குவாலிட்டி கெட்டுப்போகும் எனச் சொல்லி தடை போட்டார் ராதிகா.
ஆனாலும் சுஜாதாவிஜயகுமார் மிக அதிகமான சம்பளம் தருவதாலும் முதன் முதலில் சின்னத்திரையில் மீனா வருவதால் அந்த சீரியல் பெரிய ஹிட்டாகும் என்பதாலும் லட்சுமி சீரியலை இயக்க ஒப்புக்கொண்டுவிட்டார் சுந்தர்.கே.விஜயன்.
இது ராதிகாவுக்கு பெரிய எரிச்சலை உண்டாக்க... சுந்தர்.கே.விஜயனை தனது செல்வி சீரியலிலிருந்து நீக்கிவிட்டு, சமுத்திரக்கனியை செல்விக்கு இயக்குநராக்கியிருக்கிறார் ராதிகா.

Tuesday, July 04, 2006

காலையில் எழுந்ததும் கண்ணாடி முன் கமல் - புதிய தகவல்கள்

இன்னமும் கல்லூரி பருவத்தை கடக்காதவர் போல இளமையை மெயின்டெய்ன் பண்ணுவதில் சிவக்குமாருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் காதல் இளவரசன் கமல்ஹாசன்தான்.
படத்திற்கு படம் கெட்டப்புகளை மாற்றும் கமலின் கதாபாத்திரங்கள் குறித்து பி.எச்.டி. பண்ணும் அளவில் தான் ஏற்கப்போகும் வேடத்திற்கு ஈடுபாடு காட்டுவதில் உலகநாயகனுக்கு நிகர் ஒருவருமில்லை.
'வேட்டையாடு விளையாடு' படத்திற்காக உடம்பை முறுக்கேற்றிய கமல், தசாவதாரம் படத்திற்காக தனது உருமாற்றத்தை ஆரம்பித்துவிட்டார். அந்த படத்தில் கமல் ஏற்கப்போகும் பத்து வேடங்களை காண இப்போதே எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில், மீசையில்லா முகத்துடன் ஒரு கெட்டப்பில் நடிக்கப்போவது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. சமீபத்தில் அவர் கலந்துகொள்ளும் விழாக்களில் மீசையில்லாமலே தோன்றுகிறார்.
மீசை மழிக்கும் விஷயம்தானே என்று சாதாரணமாக நினைக்க தோன்றினாலும் அதற்காக கமல் எடுத்துக்கொள்ளும் சிரத்தையை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் உள்ளது.

முகத்தில் கொஞ்சம்கூட முடி தலை நீட்டிவிடக்கூடாது என்பதற்காக தினமும் ஷேவிங் செய்துகொள்கிறாராம் கமல்.
அதிகாலையில் எழுந்ததும் கமல் செய்யும் முதல் வேலை கண்ணாடி முன் நிற்பதுதான். தோல் அலர்ஜி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காஸ்ட்லியான க்ரீம்களை தடவும் கமல் ப்ளாட்டினம் ப்ளேடை பயன்படுத்தி ஷேவிங் செய்துகொள்கிறாராம். இதனை தினந்தோறும் செய்வதில் சிரமம் பார்க்காமல் கெட்டப்பை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறாராம்.
'கமல் தி கிரேட்.'

நடைபாதை குழந்தைகளுடன் ஐஸ்வர்யாராய்!

தலைப்பை படித்ததும் ஏதோ படப்பிடிப்பு தகவல் என்று தோன்றினாலும், இது நிஜம்! நடைபாதை குழந்தைகளின் நலம் விசாரித்து அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார் ஐஸ்வர்யாராய்!
மணிரத்னத்தின் 'குரு' படப்பிடிப்புக்கு சென்னை வந்தாலும் வந்தார்... போகிற இடமெல்லாம் செய்தியாகி பத்திரிகைகளுக்கு அட்சயபாத்திரமாகிவிட்டார் ஐஸ்வர்யாராய்.
சினிமா தியேட்டரில் அபிஷேக்குடன் படம் பார்த்தது, இரவு விடுதியில் ஜோடியாக நடனமாடியது என பரபரப்பை கிளப்பியவர் சென்றவாரம் சென்னை மெமோரியல் ஹாலுக்கு படப்பிடிப்புக்கு வந்தார். அங்கு அவரைக் கண்ட நடைபாதை சிறுவர்கள் உற்சாகமாகிவிட்டனர். பாதுகாப்பு வீரர்களை கடந்து தன் அருகே வரமுயன்ற அவர்களை அன்புடன் விசாரித்தார் ஐஸ்வர்யாராய். பிறகு அவர்களுடன் கைகுலுக்கினார்.
மெமோரியல் ஹாலில் அதற்கு முந்தைய நாள் தொடங்கி அபிஷேக்பச்சன் இடம் பெறும் கோர்ட் சீனை எடுத்துக் கொண்டிருந்தார் மணிரத்னம். வழக்கமாக ஒருநாள் ஒரு காட்சி மட்டும் இயக்கும் இவர் ஐஸ், அபிஷேக் என இரு பிரபலங்கள் நடிப்பதால் ஒருநாளைக்கு மூன்று முதல் நான்கு காட்சிகள் வரை ஷூட் செய்கிறார்.
இவரது 'குரு' பற்றி ஒரு கிசுகிசு.

ஹாலிவுட்டின் முக்கியமான திரைப்படம் 'சிட்டிசன் கேன்'. 20-ம் நூற்றாண்டின் சிறந்தபடமாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய பத்திரிகை அதிபர் இறந்து போகும் முன் இறுதியாக ஒரு வார்த்தை கூறுகிறார். அவரைப் பற்றி டாக்குமெண்ட்ரி தயாரிப்பவர் அந்த வார்த்தையின் பொருளை அறிய பத்திரிகை அதிபரின் நெருக்கமான நண்பர்கள்,மனைவி மற்றும் முன்னாள் மனைவிகளை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் அந்த அதிபரின் கசப்பான வாழ்க்கை மற்றும் அவரது தோல்விகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது. வெளியே மிகப் பெரிய வெற்றியை ஈட்டியவரின் நிஜவாழ்க்கை எப்படியிருந்தது என்பதுடன் அவரது உயர்வும் வித்தியாசமான முறையில் 'சிட்டிசன் கேன்'னில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
மணிரத்னத்தின் 'குரு' மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானியின் கதையை பின்னணியாக கொண்டது. அவரும் 'சிட்டிசன் கேன்' கதாநாயகனைப் போல எளிய பின்னணியிலிருந்து உயரத்துக்கு வந்தவர். ஏற்கனவே கப்பலோவின் 'காட்பாதர்'படத்தின் இன்ஸ்பிரேஷனில் 'நாயகன்' படத்தை எடுத்திருக்கிறார் மணிரத்னம். ஆகவே 'குரு'வும் 'சிட்டிசன் கேன்'னின் இன்ஸ்பிரேஷன்தான் என்கிறார்கள்.
உண்மையா மணிசார்?

இருக்கிற பளபளப்புக்கே படமில்லை இதுல....

பீர் என்றால் நான்கைந்து. ஜின் என்றால் அரைபாட்டில்! இது ராம் நடிகையின் ஒருநாள் கணக்கு. அழகான உடம்புக்கு ஆல்கஹால் எத்தனை நாள் ஒத்துக்கொள்ளும்? திடீரென்று கடுமையான வயிற்று வலியுடன் நடிகை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார். அளவுக்கு மீறிய ஆல்கஹால் இன்டேக்தான் வயிற்றுவலிக்கு காரணம் என்று கூறி, இனி பாட்டில் பக்கமே பார்வையை திருப்பாதீங்க என அட்வைஸ் கூறி அனுப்பியிருக்கிறார் டாக்டர்.

தனது ஏரியா படத்துக்காக மூன்றெழுத்து அட்டகாச இயக்குனர் ...ஷ்கா என்ற நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சம்பளம் முதல் பைவ்ஸ்டார் ஹோட்டல் சாப்பாடுவரை நடிகை பிரச்சனையை கிளப்புகிறாராம். இதனால் ...ஷ்காவுக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.
நேற்றுவரை ஒருநாளுக்கு இரண்டு லட்சம் வாங்கிக் கொண்டிருந்த வைகைப்புயல் அதை மூன்று லட்சமாக உயர்த்தியிருக்கிறார். மேலும், முன்பு தயாரிப்பாளர்களுடன் நடந்த 'ரெட் கார்டு' மோதலில் கேப்டன் தனக்கு சாதகமாக நடக்காததை மனதில் வைத்து அவரது வள்ளல்புரி படத்தில் நடிக்க கேட்டபோது போயா போ என்று மறுத்துவிட்டார். இதனால் மதுரைக்காரர்களுக்கு மத்தியில் cold war ஸ்டார்ட் ஆகியிருக்கிறது.
சருமத்தை பளபளப்பாக்க மலேசியா செல்வது பேஷனாகி வருகிறது. நட்பு, ஒல்லிப்பிச்சானை தொடர்ந்து சங்கம நடிகையும் மேனி பளபளப்புக்கு மலேசியா செல்கிறார். இருக்கிற பளபளப்புக்கே படமில்லை இதுல எக்ஸ்ட்ரா பளபளப்பு எதுக்கு என்று நெட்டி முறிக்கிறது சக நடிகைகள் வட்டாரம்!
அந்நியன் நடிகை நாற்பது லட்சம் இருந்தால் கால்ஷீட் இல்லையேல் கெட்-அவுட் என்று கூறிவந்தார். இப்போது கொடுப்பதைக் கொடுங்கள் நடித்து தருகிறேன் என 'புதுசு'நடிகரின் 'யாவாரி' படத்திற்கு தூது அனுப்பியிருக்கிறாராம். ஏழைக்கேத்த எள்ளுருண்டை பற்றி நடிகைக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது.

முன்னோட்டம் --- சத்தம் போடாதே

நடிப்பு: ப்ருதிவிராஜ், பத்மப்ரியா
இயக்கம்: வஸந்த்
இசை: யுவன்ஷங்கர் ராஜா
கதை
சந்தோஷமாக வாழும் நடுத்தரக் குடும்பத்தில் திடீரென பிரச்சனை சுனாமி வீசுதும் அதன்பின் நிகழும் விளைவுகளுமே கதை.
நடிகர் - நடிகைகள்
ப்ருதிவிராஜ், பத்மப்ரியா, நித்தின், ராகவ் ராஜா மற்றும் பலர்.
சிறுதுளிகள்
* 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே' படத்திற்கு பிறகு வஸந்த் இயக்கும் படம்.
* கதைக்களமான காஞ்சிபுரம், சென்னை ஆகிய இரண்டு இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
* நாயகன் ப்ருதிவிராஜ் கம்ப்யூட்டர் இன்ஜினியராகவும், நாயகி பத்மப்ரியா பட்டதாரி பெண்ணாகவும் நடித்துள்ளனர். இரண்டாவது நாயகனாக நித்தின் அறிமுகமாகிறார்.
* 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்திற்கு பிறகு வஸந்த் - யுவன்ஷங்கர் ராஜா இணைகின்றனர்.
* படத்தில் மொத்தம் 5 பாடல்கள். தாலாட்டு பாடல் ஒன்றும் இதில் அடங்கும்.
* 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே' படத்தில் 'ஒரு காதல் வந்துச்சோ...' பாடலுக்கு இசையமைத்த ராகவ் ராஜாவும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.
* காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணாவின் வீட்டில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.
* பாடல் காட்சிகள் கோவா, கேரளா உள்ளிட்ட இடங்களில் படமாகவுள்ளது.

மீராஜாஸ்மின் அபராதம் : கோயிலில் பரிகாரம்

கோயிலில் நடிகைகள் நுழைவதாக கிளம்பியிருக்கும் புகைச்சலை பார்த்தால் குஷ்புவுக்கு கோயில் கட்டியதுபோல் நடிகைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனிக்கோயில்கள் கட்டிக்கொள்வது நலம் என்று தோன்றுகிறது. ஜெயமாலா, சுதாசந்திரனை தொடர்ந்து தினம் ஒரு கோயில் பிரச்சனை செய்தித்தாள்களில் முக்கிய பக்கங்களை நிரப்பிவிடுகிறது. இன்றைய செய்தித்தாளில்கூட இந்த சர்ச்சை லிஸ்டில் இன்னொரு நடிகையும் தன் மூக்கை நுழைத்துள்ளார்.
அந்த நடிகையின் பெயர் கிரிஜா லோகேஷ். கன்னட டி.வி. தொடர்களில் நடித்துவரும் அவர் டி.வி. பேட்டியொன்றில் தனக்கு 35 வயது இருக்கையில் தனது குடும்பத்துடன் சபரி மலைக்கு சென்றதாகவும் அப்போது ஐயப்பனை தரிசனம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவலை தெரிவித்துள்ளதோடு கூடவே புரட்சி புயலாகவும் சீறியுள்ளார். "தாய்க்கு புலி பால் கொண்டு வந்து கொடுத்த அய்யப்பனை பெண்கள் தரிசனம் செய்யக்கூடாது என்றால் அது சரியல்ல. இப்படி ஒரு மூட நம்பிக்கை இருக்கக்கூடாது" என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
இதற்கு கோயில் நிர்வாகம் என்ன நடவடிக்கையில் இறங்கப்போகிறதோ? என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க, மீராஜாஸ்மின் நுழைந்த கோயிலில் பரிகாரம் செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி கோயிலில் நுழைந்ததற்காக மன்னிப்பும், பத்தாயிரம் அபராதமும் கட்டிவிட்டாலும், மீரா கோயிலில் நுழைந்ததை தீட்டாக கருதுகிறது கோயில் நிர்வாகம்.
இதனால் நேற்று கோயிலின் உள்ளே எவரையும் அனுமதிக்காமல் புண்ணிய தீர்த்தங்கள் தெளித்தும் வேதமந்திரங்கள் ஓதியும் பரிகாரம் செய்யப்பட்டுள்ளது.

டிராவிட்டுக்கு சேப்பல் புகழாரம்

கடைசி டெஸ்டில் டிராவிட்டின் ஆட்டம் அற்புதமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல், அணியின் மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் வகையில் ஆடப்பட்ட மிகச் சிறந்த இன்னிங்ஸ் இது என்று குறிப்பிட்டுள்ளார்.'தொடர் முழுக்க அவரது ஆட்டம் பிரமாதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக கடைசி டெஸ்டில்' என்று சேப்பல் குறிப்பிட்டார். 'ஹர்பஜன், கும்ப்ளே, மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்கு இருந்தது எனினும், இரு தரப்பு பேட்ஸ்மேன்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது டிராவிட் தான். டிராவிட்டுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைக்காமல் இருந்திருந்தால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பேன்' என்றும் சேப்பல் குறிப்பிட்டார்.'முதல் இன்னிங்ஸில் விக்கெட்டை இழந்தபோது கூட டிராவிட் ஆட்டக்களம் குறித்து புகார் தெரிவிக்கவில்லை. மாறாக, தான் முன்னால் வந்து அந்த பந்தை ஆடியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது தன் திறனை மீண்டும் மீண்டும் மெருகேற்றிக் கொள்ளும் ஆர்வம் கொண்ட ஒரு வீரரின் மனோநிலையை படம் பிடித்துக் காட்டுகிறது' என்று சேப்பல் கூறினார்.கேப்டனாகவும் டிராவிட் முன்னேற்றம் கண்டு வருவதாக சேப்பல் கூறினார். 'மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், டிராவிட் இப்போதெல்லாம் மிகக் கடுமையான முடிவுகளையும் எடுக்கப் பழகிவிட்டார். எது அணியின் நலனுக்கு உகந்ததோ, அதனை எடுப்பதில் அவர் தவறுவதில்லை. ஆன்டிகுவா டெஸ்டிலும், கடைசி டெஸ்டிலும் முதலில் பேட் செய்ய தீர்மானித்தது அப்படி ஒரு கடுமையான முடிவு தான். விமர்சனத்திற்கு ஆளானாலும் கூட அவை இரண்டுமே மிகச் சிறந்த முடிவுகள்' என்று சேப்பல் தெரிவித்தார்.

சானியா மிர்சா இரட்டையர் போட்டியிலும் தோல்வி

விம்பிள்டனில் நடைபெறும் மகளிர் பிரிவு இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் சானியா மிர்சா-மிசெல்லா க்ராஜிசெக் இணை தோல்வியடைந்தது.நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் சானியா மிர்சா ஹாலந்து வீராங்கனை மிசெல்லா க்ராஜிசெக் இணை 8ம் தரவரிசை இணையான டெமென்டிவா-பென்னெட்டா இணையுடன் விளையாடியது.இதில் பென்னெட்டா-டெமென்டிவா இணை 6-4 6-2 என்று வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஒற்றையர் போட்டியில் முதல் சுற்றிலேயே டெமென்டிவாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார் சானியா மிர்சா என்பது குறிப்பிடத்தக்கது.

என்எல்சி ஊழியர்கள் ஸ்டிரைக் - மின் உற்பத்தி பாதிப்பு

நெய்வேலி நிலக்கரி நிறுவன ஊழியர்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினார்கள். இதன் காரணமாக மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக இன்று ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நெய்வேலியில் மின்உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 3 மின் உற்பத்தி நிலையங்களில் 2490 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறண் உள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக 30 சதவிகித உற்பத்தி பாதிக்கப்பட்டதாக என்எல்சி உதவி மேலாளர் வி.ஆர்.சாமி தெரிவித்துள்ளார்.நிலக்கரி உற்பத்தியும் 30 சதவிகிதம் பாதிக்கப்படடிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Sunday, July 02, 2006

இந்திய ரயில்வேயின் மிக பெரிய கால்சென்டர்

இந்தியன் ரயில்வே தனது பயணிகள் நலனுக்காக எடுத்து வரும் புதிய முயற்சிகளில் ஒன்றாக நாட்டிலேயே மிக பெரிய கால்சென்டரை அமைத்து வருகிறது.
இந்த ஆண்டின் இறுதியில் இப்புதிய கால்சென்டர் செயல்பட துவங்கும் என இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்பரேஷன் செயல் இயக்குனர் பி.கே.கோயல் தெரிவித்து உள்ளார்.
சென்னை, டில்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மண்டலங்களில் மையங்கள் அமைக்கபடும் என்றும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் இதை பயன்படுத்தி பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பயண சீட்டுக்கள் விற்பனை, சுற்றுலா தகவல்கள் அளித்தல், தங்கும் இடங்கள் பதிவு செய்து தருதல் ஆகியவை இந்த மையங்களில் மேற்கொள்ளப்படும்.
ரயில்வே துறை ஓட்டல்களும் மேம்படுத்தபட உள்ளதாகவும், இதற்காக 100 இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கான ஒப்பந்த புள்ளிகளும் வழங்கப்பட்டு உள்ளதாக கோயல் தெரிவித்தார்.

4வது டெஸ்ட் : 200 ரன்களுக்கு சுருண்டது இந்தியா

ஜமைக்காவில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கேப்டன் ராகுல் டிராவிட், அனில் கும்ளே தவிர மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியையே இந்த டெஸ்டிற்கும் இந்தியா களமிறக்கியது. டாஸில் வென்ற கேப்டன் டிராவிட் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். பெட்ரோ காலின்ஸ் வீசிய முதல் ஓவர் 3-வது பந்திலேயே வீரேந்திர சேவாக் லெக் திசையில் ஆட சர்வான் அதை அபாரமாக பளிச்சென்று பிடித்தார். இதனால் ஷேவாக் ரன் ஏதும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார். முதல் நிலையில் லஷ்மண் களமிறக்கப்பட்டார். வந்தவுடனேயே அவரும் பெட்ரோ காலின்ஸ் பந்தில் ஆட்டமிழந்திருப்பார். ஆனால் மட்டை விளிம்பில் பட்ட பந்து ஸ்லிப் திசையில் கிறிஸ் கெய்லுக்கு முன்னதாகவே விழுந்தது.
ஜெரோம் டெய்லர் 4-வது ஓவரில் வாசிம் ஜாபருக்கு வேகமாக ஒரு பந்தை வீசினார் ஜாபர் மட்டையை விரைவாக கீழே இறக்காததால் அவரது ஆஃப் ஸ்டம்ப் மைதானத்தை விட்டு பெயர்ந்தது. இந்தியா துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு உணவு இடைவேளைக்கு முன் கோலிமோர், டெய்லர், காலின்ஸ், பிராவோ ஆகியோர் வீசிய பந்து வீச்சு சிறப்பாக இருந்தாலும் இந்தியா 29 ஓவர்களில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆமை வேகத்தை நியாயப்படுத்துவதாக இல்லை. லஷ்மண் மிக மோசமாக ஆடினார். இருப்பினும் அதிர்ஷ்டம் இவர் வசம் இருந்ததை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. லாரா ஒரு கேட்சை கோட்டை விட்டும் வெளியே சென்ற பந்தை ஆட முயன்று ஆட்டமிழந்தார் லஷ்மண். 96 பந்துகளில் தடவி தடவி 18 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார்.ராகுல் டிராவிட் ஏற்கனவே பந்தை மட்டையில் வாங்க மறுக்கும் விதமாக ஆடினார். மிகவும் எதிர்மறை மனோ நிலையுடன் டிராவிட் ஆடியதால் லஷ்மணுக்கு பிறகு வந்த யுவராஜ், கயீஃப் ஆகியோரையும் அதைரியப்படுத்தியது போல் ஆயிற்று.19 ரன்கள் எடுத்த யுவராஜ் சிங் டெய்லரின் கன கச்சிதமான யார்க்கருக்கு எல்.பி.டபிள்யூ ஆனார்.கயீப் நேற்றைய ஆட்டக் களத்தில் எம்பிக் குதித்து ஆடிய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை நிச்சயம் எரிச்சல் அடையச் செய்திருக்கும்.
அவரும் 13 ரன்கள் எடுத்த நிலையில் லாராவிடம் கேட்ச் கொடுத்து டெய்லரிடம் ஆட்டமிழந்தார்.பிறகு எம். எஸ். தோனி ஆடிய பொறுப்பற்ற கட் ஷாட்டால் இந்தியா 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.டிராவிட் அவ்வப்போது மட்டை விளிம்பை ஸ்லிப் ஃபீல்டர்களுக்கு காட்டிக்கொண்டுதான் இருந்தார். ஆனால் அனில் கும்ளேயின் அபாரமான 45 ரன்களும் டிராவிடுடன் இவர் இணைந்து 7வது விக்கெட்டுக்கு சேர்த்த 93 ரன்களுமே இந்தியாவின் மானத்தை காப்பாற்றியது எனலாம்.டெய்லரின் கடின உழைப்பிற்கு பலன் கிடைத்தது. அவர் வீசிய 18.4 ஓவர்களில் 50 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைபற்றினார். இந்தியா 200 ரன்களுக்கு மிக மோசமாக சுருண்டது.

உயிர் - சினிமா விமர்சனம்

`கள்ளக் காதலுக்காக கணவன் கொலை' பேப்பரைத் திறந்தால் கண்ணில்படுகிற முதல் செய்தி இப்போது இதுவாகத்தான் இருக்கிறது. நாட்டில். . . நல்ல காதலை விட இப்போது கள்ளக்காதல் பிரச்சனைதான் அதிகம் என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்?!சமீபத்தில் வந்த `திருட்டுப் பயலே' மேல்தட்டு மக்களின் கலாச்சார சீரழிவைச் சொன்ன படம் - உயிர் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் நடக்கிற கதை. இளம் மனைவி இறந்தால் குழந்தையின் எதிர்காலம் கருதி இறந்தவனின் தங்கையை கணவனுக்கு இரண்டாம் தாரமாக கட்டிவைப்பது நடைமுறையிலுள்ள நிஜம். அதேபோல் கணவன் இறந்தால் அவனின் தம்பியை ஒரு பெண் ஏன் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று பெண்களுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் உயிர் இயக்குனர் சாமி.கத்திமேல் நடக்கற மாதிரியான சிக்கலான கதை. கொஞ்சம் சுத்திவளைச்சு சுவாரஸ்யமாகவும், ஜாக்கிரதையாகவும் சொல்லியிருக்கிறார்.பச்சைபசேலென்ற குன்னூர் பின்னனியில் படு ஜாலியாகத் தொடங்குகிறது படம். ஜிலுஜிலுக்க வைக்கிற காதல். கலகலப்பான குடும்பப் பின்னணி. கணவனின் தம்பியையும் தன் குழந்தையாகப் பாவிக்கிற அண்ணி.
`அட' என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே `நான் அப்படிப் பார்க்கல' எனக்கு அவன் வேணும். அதுக்காக கொலைகூடப் பண்ணுவேன் என்று கொளுந்தனின் காதலியிடம் சங்கீதா சொல்லும்போது வேகம் பிடிக்கிற கதை...`தடதட'வென்று ரசனையாகப் போய் நிற்கிறது.ஸ்ரீகாந்த், சம்விருத்தா, சங்கீதா இந்த மூன்று பேருக்கும் நடுவில் நடக்கிற முக்கோண (!) காதல். காதலித்த பெண்ணைக் கைபிடிக்கக் கூடாது என்பதற்காக குழந்தையின் எதிர்காலம் குடும்பச் சிக்கல் என்று சாமார்த்தியமாகக் காய் நகர்த்துகிறார் சங்கீதா. அண்ணியின் சின்னச் சின்ன செய்கைகள் சந்தேகத்தைக் கிளப்பினாலும் அப்படியிருக்காது என நம்புகிற ஸ்ரீகாந்த் என்று சுவாரஸ்யமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார்.ஸ்ரீகாந்துக்கு இந்தக் களம் புதுசு. அதை உணர்ந்து பிரமாதமாகப் பண்ணியிருக்கிறார். புதுமுகம் சம்விருத்தாவுக்கு பட்டாம்பூச்சி மாதிரி பறந்து திரிகிற கேரக்டர். ஒரு ரவுண்டு வருகிறார். சங்கீதாவுக்கு மிகப்பெரிய இன்னிங்ஸ் காத்திருக்கிறது. கலகல அண்ணியா இருந்து கலாபகக் காதலியாக மாறியதும் முகத்திலும்... தோற்றத்திலும் காட்டுகிற மாற்றம் அபாரம். ரம்யாகிருஷ்ணன், சிம்ரனைத் தொடர்ந்து இந்த மாதிரி கேரக்டர் பண்ண சரியான ஆள் ரெடி.
வசீகரா பாடலையும் சரி... பாரதி கண்ணம்மாவையும் சரி... கச்சிதமான இடத்தில் கதையோடு சேர்த்திருக்கிறார் இயக்குனர். காட்சிகளிலும்... வசனங்களிலும் மிக நுட்பமாகக் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குனர், `உங்க அண்ணன் பார்க்கத்தான் ஹார்ட் ஒர்க்கர். பெர்ஃபாமென்ஸ் பத்தாது' என்பது மாதிரியான இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.பொருந்தா காதல் வந்தால் ஆட்கள் எப்படியெல்லாம் சேடிஸ்ட்டாக மாறிவிடுவார்கள் என்பதற்கு பெற்ற குழந்தையிடமே சங்கீதா முரட்டுத்தனமாக நடந்துக் கொள்கிற காட்சி மிக நுட்பமான பதிவு. அந்தக் காட்சியைப் பார்க்கிறபோது மனது பதைத்தாலும் காலம் உணர்த்துகிற நிஜம் அது!பட்டாக்கத்தியும், ரத்தமுமாக பார்த்து அலுத்துப்போன ரசிகர்களுக்கு `உயிர்' உருகவைக்கும்.

WTO வெளிநடப்பு: இந்தியாவிற்கு 110 நாடுகள் ஆதரவு

ஜெனீவாவில் நடைபெற்ற சிறு அமைச்சர்கள் நிலை கூட்டத்தில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தைகளில் இருந்து இந்தியா வெளி நடப்பு செய்ததில் இந்தியா தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், 110க்கும் மேற்பட்ட வளரும் நாடுகள் இந்தியாவின் இந்த நிலையை ஆதரித்துள்ளன என்றும் இந்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.வளரும் நாடுகளின் கூட்டத்தில் இந்திய நிலையை அவை ஆதரித்து வழிமொழிந்துள்ளதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்நாத் தெரிவித்தார்.தோஹா சுற்று பேச்சுவார்த்தை முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காண நடைபெற்ற, சுமார் 60 நாடுகளின் வணிக அமைச்சர்களின் மூன்று நாள் கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது.விவசாய மானியம் குறித்து வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் எழுந்துள்ள கருத்து பிளவால், இந்திய வணிக அமைச்சர் கமல்நாத் இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறினார்.இந்தியா பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதும், பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் அதனை ஆதரித்துள்ளதும் உலக வர்த்தக அமைப்பினை நெருக்கடியில் தள்ளியுள்ளது.அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டின் பணக்கார விவசாயிகளுக்கு மானியத்தை குறைப்பதற்கு பதிலாக, இந்தியா போன்ற பெரிய வியாபார சந்தைகளுக்கு அணுகலை சுலபமாக்க கோரி வருகின்றன. விவசாய சூழல் கடுமையை எதிர்கொள்ள முடியாமல் இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை முடிவை நாடுவது நாடெங்கும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் அதிர்ச்சி தோல்வி - பிரான்ஸ் அரை இறுதியில்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நள்ளிரவு நடந்த 4-வது காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரேசில் பிரான்ஸ் அணியிடம் 1- 0 என்ற கணக்கில் தோல்வியுற்றது.இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு பிரேசிலுக்கு நெருக்கடி கொடுத்தனர்.முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கோல் அடிக்க இரு அணிகளுக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் வீணடித்து விட்டனர். கோல் எதுவும் விழாமல் இருந்தாலும் முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியது.அந்த அணி கேப்டன் ஷீடேன், ஹென்றி, ரிபரி, அபிதல், வியரா ஆகியோர் ஒருங்கிணைந்து ஆடினார்கள். பிரேசில் அணியில் ரொனல்டினோ, ராபர்ட்டோ கார்லோஸ் திறமையை வெளிப்படுத்தினர்.2-வது பகுதி ஆட்டத்திலும் பிரான்ஸ் ஆதிக்கம் தொடர்ந்தது. 57-வது நிமிடத்தில் அந்த அணிக்கு பிரீகிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஷீடேன் பந்தை தூக்கி அடித்தார். பிரான்ஸ் முன்கள வீரர் தியரி ஹென்றி அருமையாக கோல் அடித்தார். இந்த கோலை பிரேசில் வீரர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. உலக கோப்பையில் ஹென்றி அடித்த 3-வது கோலாகும்.இந்த கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என்ற முன்னிலை பெற்றது.கோல் வாங்கிய அதிர்ச்சியில் பிரேசில் வீரர்கள் அனைவரும் முன்னேறி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அதிக விறுவிறுப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் பிரான்ஸ் பின்கள வீரர்கள் பிரேசில் கோல் அடிக்க விடாமல் இருக்கும் வகையில் அற்புதமாக ஆடினார்கள்.
61-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி 2-வது கோலை போட வாய்ப்பு கிடைத்தது. ரிபரி அடித்த பந்து மயிரிழையில் கோல் கம்பத்தை விட்டு விலகி சென்றது. மேலும் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை பிரான்ஸ் வீரர்கள் தவற விட்டனர்.
ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில் பிரேசில் வீரர்கள் கடுமையாக போராடினார்கள். பதில் ஆட்டக்காரர் ரோபினோ கோல் அடிப்பதை தவற விட்டார்.இதே போல ரொனால்டினோ பிரிகிக்கில் அடித்த பந்து மயிரிழையில் கோல் கம்பத்திற்கு மேலே சென்றது. 88-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் வளையை நோக்கி பந்தை தூக்கி அடித்தார். அதை பிரான்ஸ் கோல் கீப்பர் பார்கஸ் அருமையாக பிடித்தார்.கடைசி வரை பிரேசில் அணியால் பதில் கோல் அடித்து சமன் செய்ய முடியவில்லை. பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. உலக சாம்பியன் பிரேசில் அதிர்ச்சிகரமாக தோற்றது.
1998ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. தற்போது 2-வது முறையாக பிரான்சிடம் பிரேசில் தோல்வியைச் சந்தித்து இருக்கிறது.உலக கோப்பை போட்டியில் பிரேசில் தொடர் வெற்றிக்கு பிரான்ஸ் முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கு அந்த அணியின் கேப்டன் ஷீடேனின் அருமையான ஆட்டம்தான் காரணம். பிரேசிலின் அதிர்ச்சி தோல்வியால் மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பிரேசில் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். பிரான்ஸ் நாட்டு ரசிகர்கள் வெற்றியை மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாடினார்கள்.இதன் மூலம் 1982ம் ஆண்டிற்கு பிறகு அரையிறுதியில் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே தகுதி பெற்றுள்ள நிகழ்வு மீண்டும் தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரை இறுதியில் பிரான்ஸ் போர்ச்சுக்கல் அணியைச் சந்திக்கிறது.

வணக்கம்

இந்த சிறிய பக்கத்தில் என்னால் இயன்ற செய்திகளை அழகிய தமிழில் பதிக்கலாம் என்று விரும்புகிறேன்.அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகிறேன்.தவறுகள் இருந்தால் திருத்தி தருமாறு அழைக்கிறேன்.
நன்றி.